சென்ற இதழ் தொடர்ச்சி...
இனி 12 பாவகங்களில் மாந்தி நிற்கும் பலன்களைக் காணலாம்.
லக்ன பாவகம்
ஜென்ம லக்னத்தில் மாந்தி இருந்தால், முகத்தில் வசீகரமும், அழகும் குறைவாக இருக்கும். முகத்தில் தேஜஸ், பிறரைக் கவரும் ஒளி குறைவாக இருக்கும். எப்போதும் வாட்டத்துடன் காணப்படுவர். ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார். வீரதீரச் செயல்களில் ஈடுபடமுடியாது.
பொது இடங்களில் கௌரவம் கிடைக்காது. புகழுக்கு பங்கம் ஏற்படும். தனக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை பிறருக்குக் கிடைக்கும். வதந்திகளால் அவமானத்தை சந்திக்கநேரும்.
தெய்வ பக்தி, மேலோரிடத் தில் பணிவு, மரியாதை போன்ற நற்குணங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு உடலில் நோய் இருந்துகொண்டே இருக்கும்.
உடன்பணிபுரிவர்களிடம் மரியாதை கிடைக் காது. மனம்விட்டு சந்தோஷமாக யாரிடமும் பழகமாட்டார்கள். விஷம் தீண்டுவதால் ஆபத்து, கண்பார்வைக் குறைபாடு ஏற்படும்.
சென்ற பிறவியில் நல்லவர் மனதை நடுங் கவைத்தது, தானம் கொடுப்போரைத் தடுத்தது, நல்லது செய்வதுபோல் நடித்துக் கெடுதல்செய்தது போன்ற குற்றங்களால் ஏற்பட்ட மாந்தி தோஷம்.
பரிகாரம்
சிவ வழிபாடு செய்யவேண்டும். அனுமன் சாலீஸா பாராயணம் செய்யவேண்டும் அல்லது ஒலிக்கச்செய்து கேட்கவேண்டும்.
பலருக்கும் பயன்படும்பொதுக்காரியங் களுக்கு நிதிகொடுத்து உதவ இத்தோஷம் நீங்கும்.
இரண்டாம் பாவகம்
இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் மாந்தி இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நிம்மதியின் மையும் மிகுதியாக இருக்கும். மன உளைச்சல், தூக்கமின்மை, சண்டை, சச்சரவு இருக்கும். தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும்.
வாக்கு சுத்தம் குறைவாக இருக்கும். எதிர்வாதம் செய்து, வீண்பேச்சு பேசி, அந்நியரை அண்டிப் பிழைப்பவராக இருப்பார். மாமிசப் பிரியர். மது அருந்துபவர். கோபம் நிறைந்தவர். தன் வாயால் வம்பு, வழக்கை விலைகொடுத்து வாங்குபவர். வஞ்சனை எண்ணம் மிகுந்தவர். அவச்சொல் பெறநேரும். அதிர்ஷ்டக்குறைவானவர். உயர்ந்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு மிகக்குறைவு.
கிரகண காலத்தில் பிறந்து லக்னத்திற்கு இரண்டில் மாந்தி இருந்தால், பிறவியில் வலது கண் குறைபாடிருக்கும். அடிப்படைக் கல்வி தடைப்படும். மாரகத்திற்கு ஒப்பான கண்டங் களை அடிக்கடி எதிர்கொள்ள நேரும்.
பேராசையைத் தூண்டி ஒருவரின் வாழ்வைக் கெடுத்தல், தவறான வார்த்தைகளால் பிறருக்கு மனவேதனை செய்தல், பொய் சொல்லி பணம் பறித்தல், நம்பிக்கை துரோகம், நம்பிக்கை மோசடி, பொய்சாட்சி சொல்லி ஒரு குடும்பத் தைக் கெடுத்த வினையைத் தீர்க்கப் பிறந்த கர்மவினைப் பிறப்பாகும். அதன்பயனாக அடிக்கடி விபத்து, கண்டம், தற்கொலை உணர்வு, பண இழப்பு ஏற்படும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் திருவிளக்கு வழிபாடுசெய்ய பணக்கஷ்டம் தீரும்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போது அன்னதானம் செய்துவரவேண்டும்.
குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் போதனை செய்துவர வேண்டும்.
மூன்றாம் பாவகம்
மூன்றாம் பாவகத்தில் மாந்தி இருந்தால், இளைய சகோதரம் அமையும் வாய்ப்பு மிகக்குறைவு. பிறந்தால் நிலைக்காது அல்லது சகோதரத்தால் உபயோகமில்லை. மூன்றாம் பாவகத்தில் சூரியனுடன் மாந்தி சேர்ந்து நின்றால், தந்தைக்கு பிற பெண்களுடன் தொடர்பு அல்லது இரண்டாம் திருமணத்தின் மூலம் வாரிசு இருக்கும். அந்த வாரிசுகளுடன் தீராத போராட்டத்தையும் ஏற்படுத்தி நிம்மதி குறையும்.
தைரியம் குறைவாக இருக்கும். எளிதில் காரிய சித்தி கிட்டாது. ஆயுள் குறைபாடு உண்டு. செவித்திறன் குறைவாக இருக்கும். அறுசுவை உணவு உண்ணும் வாய்ப்பு கிடைக்காது. போட்டி பந்தயங்களில் படுதோல்வி மற்றும் மிகுந்த நஷ்டம் ஏற்படும். ஆபரண யோகம், கலைகளில் ஈடுபடுதல், தெய்வக் காரியங்களில் ஈடுபடுதல் முழுவெற்றியைத் தராது. உடலின் கழுத்துப் பகுதியில் கட்டி, வீக்கம் போன்ற பாதிப்பிருக்கும்.
ஆண்மை இல்லாதவர். ஆட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் குறைவு. முதலாளியாக இருந்தால்கூட வேலையாள் வேலையையும் தானே செய்யநேரும். சாமர்த்தியக்குறைவு உண்டு. மாரக தசைக் காலங்களில் கொடும் மாரகம் ஏற்படும்.
தவறான வதந்தியைப் பரப்பியவர்கள், உடன்பிறந்தவர்களிடையே கோள்மூட்டி பிரிவினையை ஏற்படுத்தியவர்கள், உழைத்த கூலியைக் கொடுக்காதவர்கள், மற்றவரைக் கெடுக்க மாந்த்ரீகம் செய்தவர்கள். இதன்பலனாக தங்களின் உடன்பிறந்தவர்களுக்கு நன்மை செய்தாலும் நற்பெயர் கிடைப்பது கடினம்.
பரிகாரம்
மகா கணபதி ஹோமம் நடத்தவேண்டும்.
உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்கு தந்தையின் ஸ்தானத்திலிருந்து செய்யவேண்டிய நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்.
நான்காம் பாவகம்
நான்காமிடமான சுக ஸ்தானத்தில் மாந்தி நிற்க, தாயாருக்கு எந்த யோகமும் கிடைக்காது.
தாயாருக்கு குடும்பத்தில் முக்கியத்துவ மிருக்காது. தாயின் அதிகாரம் செலுத்தும் நிலை குறைவாக இருக்கும். தாய்- தந்தையிடம் அன்பு குறைந்தவராக இருப்பார். தாயால் அனுகூலங்கள் குறைவாக இருக்கும். வாகன யோகமும், உயர்கல்வி கற்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும். தாய்வழி உதவி கிடைக்காது.
வாஸ்துக் குற்றமுள்ள மனையே அமையும். வாங்கும் பூமியில் மனித, மிருகங்களின் எலும்பு இருக்கும் அல்லது சல்லிய தோஷம் நிறைந்த மனையாக இருக்கும். வீடுகட்டும் பணி பாதியில் தடைப்படும் அல்லது குடியேறியபிறகு துர்மரணம் நடக்கும். வீடுகட்டிக் குடியேறியபிறகு நோய்நொடி அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டால் நிம்மதியிருக்காது. தொழிற்சாலையாக இருந்தால் அடிக்கடி விபத்து ஏற்படும். பூமியில் நீராதாரம் இருக்காது. விவசாய நிலமாக இருந்தால் மகசூல் குறைவாக இருக்கும். விவசாயம் எதிர்பார்த்த பலனைத் தராது. கிணறு வெட்டுதல், ஏரி, குளம் அமைத்தல் போன்ற யோகம் கிடைக்காது. பூமி தோஷம், சல்லிய தோஷத்திற்கு பிரசன்னத்தின்மூலம் தீர்வுபெற முடியும். கால்நடை வைத்து வாழும் நிலை இருக்காது.
நல்ல நண்பர்களும், நண்பர்களால் உதவியும் கிடைக்காது. சிரமமும் விரயங்களும் ஏற்படும். நிம்மதியற்ற வாழ்க்கை, அமைதிக்குறைவு இருக்கும். வெளியூர்களில் வசிக்கும் நிலை ஏற்படும். பள்ளிக்கல்வியில் தடை உண்டாகும்.
நிலமோசடி, முறையற்ற சொத்துப் பங்கீடு, புற்றுகளை இடித்தல், தவறான முறையில் அபகரித்த பொருள், தவறான வழிபாடு செய்யவைத்தல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றுக்கான வினைப்பதிவுவே நான்காமிட மாந்தி.
இந்த அமைப்புடையவருக்கு ஆரம்பக்கல்வி தடை, உடல்நலக் குறைவிருக்கும். வீடு, வாகன யோகம் எளிதில் கிட்டாது அல்லது குடியிருக்கும் வீட்டால் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்
லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்ல பலன் தரும்.
கோவில் திருப்பணிக்கு நிதிகொடுத்து உதவவேண்டும் அல்லது கோவில் திருப்பணி வேலைகளைச் செய்யவேண்டும்.
ஐந்தாம் பாவகம்
ஐந்தாம் பாவகத்திலுள்ள மாந்தியால் சிந்தித்து செயல்படும் தன்மை இல்லாதவராக இருப்பார்.
ஐந்தாமிடமான புத்திர ஸ்தானத்தில் மாந்தி இருந்தால் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அடிக்கடி கருக்கலைப்பு நிகழும்.
அந்திமக்காலத்தில் குழந்தைகளின் அன்பும் அரவணைப்பும் இருக்காது. முற்பிறவியில் செய்த தீவினைகளுக்கு இப்பிறவியில் பலன் அனுபவிக்கநேரிடும்.
குரு சாபம், பிராமணப் பெண் சாபம் உண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருப்பார். பூர்வீகத்தில் வசிக்கமுடியாத நிலை, பூர்வீக சொத்துகளை அனுபவிக்கமுடியாத நிலை உண்டாகும். அவமானங்களும் சங்கடங்களும் தொடர்கதையாக இருக்கும். பரம்பரை வியாதித் தாக்கமிருக்கும். சுபகாரியங்கள் உரிய வயதில் நடக்காது. எல்லாமிருந்தும் எதுவுமில்லாதவரைப்போல் வாழநேரும்.
தாய் மற்றும் தந்தைவழி உறவினர்கள் தொடர்பு விட்டுப்போகும். பெரியவர்களின் நல்லாசி கிடைக்காது. தந்தை- மகன் உறவு பாதிக்கும். பதவிகளால் பயனிருக்காது.
கருச்சிதைவு செய்தவர்கள், அதற்குக் காரணமாக இருந்தவர்கள், கோவில் சிலையைத் திருடியவர்கள், குலதெய்வத்தை பங்காளி சண்டையில் குழிதோண்டிப் புதைத்தவர்கள், கோவில் சொத்தைக் கொள்ளையடித்தவர்கள், குரு காணிக்கை கொடுக்க மறுத்தவர்கள், குரு துரோகம் செய்தவர்கள், ஒருவரை மனநோயாளி யாகச் செய்து, அதன்மூலம் பொருளீட்டிய வர்கள், பூர்வீக சொத்தை அபகரித்தல் போன்றவை கர்மவினையின் பதிவாகும்.
இதன்பலனாக, இந்தப் பிறவியில் ஆசைப் பட்டதை அடையமுடியாமை, அவமானம், பூர்வீகத்தைவிட்டு வெளியேறுதல், உழைப் பிற்குரிய ஊதியமின்மை ஏற்படும். இதனால் குலதெய்வம் தெரியாமல்போவது, குலதெய்வ அனுக்கிரகமின்மை, பூர்வீக சொத்தைப் பயன்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைப் பிறப்பில் தடை, உடல்நலக் குறைவுடன்கூடிய குழந்தை பிறப்பது, குழந்தைகள் தவறான பாதையில் செல்வது போன்றவை ஏற்படும்.
பரிகாரம்
சந்தானகோபால கிருஷ்ண ஹோமம் நடத்தவேண்டும்.
குலதெய்வத்திற்கு விசேஷ ஆராதனை செய்துவரவேண்டும்.
தினமும் ஆதித்திய ஹிருதயம் கேட்கவேண்டும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க புராதன சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்யவேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகளை உணவு, உடை கொடுத்துப் பராமரிக்கவேண்டும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 98652 2040